சமையல் எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி செய்த ஊழியர் கைது
சேலத்தில் சமையல் எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.1 கோடி மோசடி
சேலம் செவ்வாய்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் ைசயத் ரகுமான் (வயது 50). இவர் செவ்வாய்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் பகுதியை சேர்ந்த கருணாகரன் (45) என்பவர் 16 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ைசயத் ரகுமான் தனது கடையின் வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ஊழியர் கருணாகரன் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கடையில் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ைசயத் ரகுமான் கேட்டதற்கு கடை ஊழியர் மிரட்டல் விடுத்துள்ளார்.
கைது
இந்த மோசடி குறித்து ைசயத் ரகுமான் சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ைசயத் ரகுமான் கடையில் இருந்து கருணாகரன் பணம் மோசடி செய்ததும், அந்த பணத்தை அவர் தனது மனைவி பவித்ராவின் (42) வங்கி கணக்குகளில் செலுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கருணாகரன் மற்றும் அவருடைய மனைவி பவித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு சென்று கருணாகரனை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். கருணாகரனின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.