மழைநீர் வரத்து வாய்க்கால்கள் அமைக்க வலியுறுத்தல்
மழைநீர் வரத்து வாய்க்கால்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொதுச்செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் ஆண்டு அறிக்கை, வரவு, செலவு உள்ளிட்டவை வாசித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டிமடம் தனி தாலுகாவாகவும், தலைமையிடமாகவும் உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மணகெதி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம் செல்ல புதிய ரெயில் பாதை அமைக்க தமிழக அரசுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும். ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து சின்னவளையம் அரங்கனேரி வரை செல்லும் சாலையில் இருபுறமும் மழைநீர் ஓடும் வகையில் நீர் வரத்து வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.