கோரிக்கைகளை வலியுறுத்திஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கடத்தூர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் 115-வது அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோபி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். வருவாய்த்துறை சங்க வட்டதலைவர் கோபால், அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் பேபி மற்றும் சங்கத்தைசேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தின் சத்தி வட்டார கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராக்கிமுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி உரிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
நம்பியூர்
நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார அரசு ஊழியர் சங்க தலைவர் மகாலிங்கம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், கருப்புசாமி, ராதாமணி, சுரேந்தர், ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சி ஊழியர்கள் துறை மாவட்ட துணை தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.
.-----------