அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி


அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி
x
தினத்தந்தி 10 Aug 2023 2:45 AM IST (Updated: 10 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி நடந்து வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பஸ் நிலையம் அருகில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வசதி இல்லாமல் இருந்தது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மேல் சிகிச்சைக்காக ஊட்டி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இதனால் ஆம்புலன்ஸ்களில் செல்லும் வழியிலேயே அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வந்தன. இதையடுத்து தமிழக அரசு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் 7 படுக்கைகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை 8,200 சதுர அடியில் கட்டுவதற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆஸ்பத்திரி அருகே விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், சுவர்கள் பூசும் பணி உள்பட கட்டிடத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிட பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. விரைவில் மற்ற பணிகள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.


Next Story