ஏம்பா...கம்முனு இரு...! செய்தியாளர்கள் சந்திப்பை தடுக்க முயன்ற போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம்


ஏம்பா...கம்முனு இரு...! செய்தியாளர்கள் சந்திப்பை தடுக்க முயன்ற போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம்
x

செய்தியாளர்கள் சந்திப்பை தடுக்க முயன்ற போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை

சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்றுஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்எல்ஏ.,க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது அங்கிருந்த போலீசார் பழனிசாமி பேட்டி கொடுக்கக்கூடாது என தடுத்தனர்.

இதனால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி, பேட்டியை பாதியில் நிறுத்தி, எழுந்து நின்று போலீசாரிடம் கோபமாக பேசினார்.

பின்னர் மீண்டும் பேட்டியை தொடர்ந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நேற்று நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அனைத்து ஆதாரங்களோடு விளக்கமளித்தும் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக்கு அனுமதி கோரினோம்.

அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு ஆதாரங்களை சபாநாயகருக்கு நாங்கள் முறைப்படி அனுப்பிவைத்தோம். அந்த கோரிக்கை மீதான முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டார். இது ஜனநாயகப் படுகொலை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்கியது செல்லும் என்பதற்கு ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்பு இருக்கிறது.

அப்படியிருக்க, தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓபிஎஸ்சை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை.

வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி சபாநாயகர் செயல்படுகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்சும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் பச்சையாக தெரிகிறது.

அரசியல் ரீதியாக ஒரு சபாநாயகர் செயல்படுவது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி ஆட்சி செய்கிறார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்" என்றார்.





Next Story