தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள்வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்

தேன்கனிக்கோட்டை:
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு யானைகள்
கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக வனப்பகுதியான தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு போன்ற பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கர்நாடக மாநில வனப்பகுதிகளுக்கு விரட்டி வருகின்றனர். இதற்கிடையே நேற்று தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்தன.
போக்குவரத்து நிறுத்தம்
இதையறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில காட்டு யானைகள் தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா என்ற இடத்தில் சாலையை கடந்து சென்றன. அப்போது வனத்துறையினர் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்தை நிறுத்தினர்.
பின்னர் காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து சென்ற பின்னர் போக்குவரத்தை தொடங்கினர். இந்த யானைகளை தின்னூர், முள்பிளாட், தவரக்கரை, அகலக்கோட்டை, ஜவளகிரி கிராமங்கள் வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.