யானை தாக்கி விவசாயி படுகாயம்
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
யானை தாக்கியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி அருகே வெங்கட்ராமன் கோவில் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 51). விவசாயி. இவர் நேற்று காலை விவசாய நிலத்தில் கால்நடைகளுக்கு இலை, தழைகள் பறிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த யானை திடீரென அம்மாசி தலையில் தந்தத்தால் தாக்கியது.
பின்னர் கீழே விழுந்த அவரை யானை காலால் மிதித்து விட்டு அடர்ந்த பகுதிக்கு சென்று மறைந்து கொண்டது. இதில் அவர் படுகாயமடைந்து வலியால் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், படுகாயமடைந்த அம்மாசியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலத்திற்கு செல்லக்கூடும் என்பதால் பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம். நிலங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தால், மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.