பாலக்கோடு அருகே அட்டகாசம் செய்த யானை சிக்கியது:-கும்கி யானை டாப் சிலிப்பிற்கு அனுப்பப்பட்டது


பாலக்கோடு அருகே அட்டகாசம் செய்த யானை சிக்கியது:-கும்கி யானை டாப் சிலிப்பிற்கு அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே அட்டகாசம் செய்த யானை சிக்கிய நிலையில், கும்கி யானை டாப் சிலிப்பிற்கு அனுப்பப்பட்டது.

அட்டகாசம் செய்த யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் யானையும், மக்னா யானையும் (தந்தம் இல்லாத ஆண் யானை) தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிக்குள் புகுந்தன. அவை இரவில் பாலக்கோடு அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. மேலும் பாப்பாரப்பட்டி அருகே குடிசையில் தூங்கி கொண்டிருந்த விவசாயி ஒருவரையும் தாக்கின.

இதனால் யானைகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து யானைகளை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க மாவட்ட நிர்வாகம் மூலம், தமிழக அரசிடம் இருந்து உத்தரவு பெறப்பட்டது.

மக்னா யானை பிடிபட்டது

இதைத்தொடர்ந்து விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப் சிலிப்பில் இருந்து கும்கி யானை சின்னதம்பி லாரி மூலம் பாலக்கோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்துக்குள் புகுந்த யானைகளை பிடிக்க முயற்சி எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 5-ந் தேதி கும்கி யானை உதவியுடன், மக்னா யானை பிடிக்கப்பட்டு, அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அந்த மக்னா யானை லாரியில் ஏற்றப்பட்டு கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் விடப்பட்டது.

கும்கி யானை அனுப்பப்பட்டது

இந்தநிலையில் மக்னா யானையை பிடித்த கும்கி யானை சின்னதம்பியை மீண்டும் டாப் சிலிப்புக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று காலை கும்கி யானை வனத்துறை லாரி மூலம்டாப் சிலிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அதற்கு பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் கரும்பு, வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி, அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அட்டகாசம் செய்த ஒரு யானை மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு யானை எப்போது பிடிக்கப்படும்? என்று விவசாயிகளிடையே கேள்வி எழுந்தது.

இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அதிகாரி விளக்கம்

பிடிபட்ட மக்னா யானை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றித்திரிந்து வந்தது. அது அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வந்தது. இதனிடையே கர்நாடகாவில் இருந்து வந்த ஆண் யானை, மக்னா யானையுடன் சேர்ந்து அட்டகாசம் செய்தது. இந்த ஆண் யானை பயந்த சுபாவம் உள்ளது.

ஆனால் மக்னா யானைக்கு பயம் இல்லை. அது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் முதலில் அது பிடிக்கப்பட்டு, டாப் சிலிப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தனியாக உள்ள ஆண் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த யானை, தனது நண்பனான மக்னா யானையுடன் சென்ற இடங்களில், தற்போது சுற்றித்திரிகிறது. அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில், அதனை பிடிக்க உத்தரவு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story