யானை தாக்கி விவசாயி பலி
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். இதையடுத்து அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். இதையடுத்து அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக 7 யானைகள் முகாமிட்டு மரகட்டா, நொகனூர், லக்கசந்திரம், மாரசந்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்ளை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மரகட்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் (வயது 60) மாடுகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். வெகு நேரமாகியும் மாடுகள் திரும்பி வரவில்லை. இதனால் வெங்கடேஷ் மாடுகளை தேடி வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த ஒரு யானை திடீரென வெங்கடேசை தாக்கி தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் வெங்கடேஷ் இறந்து விட்டது தெரியவந்தது.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விரைந்து சென்று வெங்கடேசின் உடலை எடுத்து வந்து தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயிரிழந்த வெங்கடேஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மரகட்டா கிராமத்தை சுற்றி சோலார் வேலி அமைக்க வேண்டும். டார்ச்லைட் மற்றும் பட்டாசு போன்றவை கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
தொடர்ந்து போலீசார், வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.