வேப்பனப்பள்ளி அருகே தோட்டத்தில் வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்திய காட்டு யானைவிவசாயிகள் அச்சம்
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருேக தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
காட்டு யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு கர்நாடக மாநிலம் கொழும்பூர் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வந்தன. பின்னர் 2 யானைகளும் கொங்கனப்பள்ளி, கே.கொத்தூர், சிகரமானகப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனை தொடர்ந்து தமிழக வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து 2 காட்டு யானைகளையும் வேறு வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்த நிலையில் ஒரு யானை கொழும்பூர் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. மேலும் மற்றொரு யானை கடந்த 3 நாட்களாக கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாயி நிலத்தை சேதப்படுத்தி வருகிறது. இதற்கிடையே கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானை மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு வந்தது. இந்த யானை நேற்று முன்தினம் இரவு கே.கொத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து கதிரப்பா, மல்லப்பா ஆகியோரின் தோட்டங்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது.
விவசாயிகள் அச்சம்
மேலும் அப்பகுதியில் இருந்த சிவப்பா என்பவருடைய வயலில் நெல் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. நேற்று காலை விவசாயிகள் காட்டு யானையின் அட்டகாசத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர்.
தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் விவசாய நிலத்தில் யாரும் தங்க வேண்டாம் எனவும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.