9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது கலெக்டர் ஆய்வு
9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் கலெக்டர் அலுவலக குடோனுக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
பூட்டி சீல் வைப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திர இருப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதற்காக அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இருப்பு அறையில் இருந்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய வாக்குப்பதிவு எந்திர குடோனுக்கு கொண்டு வருவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் கலெக்டர் அலுவலக மத்திய குடோனுக்கு கொண்டு வரப்பட்டு, தொகுதி வாரியாக பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டது. இதை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த குடோனில் 3,358 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,002 கட்டுப்பாட்டு கருவிகள், 2,273 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் வைக்கப்பட்டுஉள்ளது. இந்த குடோன் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.