மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்
x

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

பெரம்பலூர்

சரிபார்ப்பு பணி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஆயத்த பணியின் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மத்திய காப்பறையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் முதல் நிலை சரிபார்ப்பு பணியை, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 821 கட்டுப்பாட்டு கருவிகள், 1,501 வாக்குப் பதிவு கருவிகள் மற்றும் 824 வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள், மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 110 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 180 வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் என மொத்தம் 931 கட்டுப்பாட்டு கருவிகள், 1,501 வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் 1,004 வாக்குப் பதிவை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 6 பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு உட்படுத்தப்பட உள்ளன.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்

முதல்நிலை சரிபார்ப்பு பணியின் மேற்பார்வையாளரான பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மேற்கண்ட அனைத்து எந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு தேர்ச்சி பெறும் எந்திரங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும். இப்பணியானது நேற்று தொடங்கி அனைத்து எந்திரங்களையும் சரிபார்க்கும் வரை நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.


Next Story