மதுரை, பாலக்காடு கோட்டங்களில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க மின்மயமாக்கப்படும் பணிமனைகள்
மதுரை, பாலக்காடு கோட்டங்களில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க பணிமனைகள் மின்மயமாக்கப்படும் பணிகள் நடக்க உள்ளது.
மதுரை, பாலக்காடு கோட்டங்களில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க பணிமனைகள் மின்மயமாக்கப்படும் பணிகள் நடக்க உள்ளது.
வந்தேபாரத் ரெயில்
தென்னக ரெயில்வேயில் சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 8-ந் தேதி சென்னை-கோவை வந்தேபாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளது. ஆனால், தென்மாவட்ட பயணிகள் சென்னை-கன்னியாகுமரி இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தென்னக ரெயில்வே முழுவதும் வந்தே பாரத் ரெயில் இயக்குவதற்கு ஏற்ப ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைகளில் உரிய வசதிகள் செய்ய தென்னக ரெயில்வே பொதுமேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி மதுரை, மங்களூர், நாகர்கோவில், எர்ணாகுளம் சரக்கு ரெயில் முனையம் ஆகிய இடங்களில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு செல்லும் ரெயில் பாதையை மின்மயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் தொடங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிமனை
இதைதொடர்ந்து, மதுரை கோட்ட ரெயில்வேயில் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை ரெயில்பாதையை மின்மயமாக்குவதற்கான டெண்டர் நோட்டீசு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பராமரிப்பு பணிமனையின் 3,4-வது பாதை மின்மயமாக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.73 லட்சத்து 17 ஆயிரத்து 22 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் டெண்டர் இறுதிசெய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, பாலக்காடு கோட்டத்தில் மங்களூர் ரெயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் ரூ.62 லட்சத்து 47 ஆயிரத்து 758 மதிப்பீட்டில் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தென்னக ரெயில்வேயில் உள்ள மதுரை, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ரெயில்வே கோட்டங்களில் தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரெயிலின் என்ஜினை கழற்றி மாற்ற முடியாது. எனவே, ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் மின்மயமாக்கல் பணிகளை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். ஆனால், ரெயில்கள் இயக்கம் குறித்து ரெயில்வே வாரியம் மட்டுமே முடிவு செய்யும் என்றனர்.