விழுப்புரத்தில்மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1.12.2019 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், பணியாளர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் அந்தந்த மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன மாநில துணைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். கணக்காயர் களத்தொழிலாளர் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மண்டல செயலாளர் பெரியசாமி, பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன், பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் சரநாராயணன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், ஜனதா சங்க மாவட்ட செயலாளர் மகேஷ், தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு மாவட்ட செயலாளர் பழனிவேல், அம்பேத்கர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. திட்ட செயலாளர் சேகர் நன்றி கூறினார்.