மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரானாவை காரணம் காட்டி 10 சதவீதமாக குறைக்கப்பட்ட போனசை பொதுத்துறை ஊழியர்களுக்கு மீண்டும் 20 சதவீதமாக வழங்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்கிட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க துணைத்தலைவர் பூலுடையார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகேசன், மந்திரமூர்த்தி, வேல்முருகன், ராமசுப்பிரமணியன், பால சுப்பிரமணியன், சங்கிலி பூதத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜோதி, சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட செயலாளர் முருகன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் வண்ணமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.