பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படும் மின்சாரம்
பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படும் மின்சாரம்
தளி,
உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு மைதானம்
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், ஆக்கி, கைப்பந்து, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளை தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள் விளையாடி வருகின்றனர். காலை, மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மைதானத்தில் அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
மைதானத்தில் விளையாடும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒலிபெருக்கி மூலமாக வர்ணனையும் செய்யப்படுகிறது. இதற்காக மைதானத்தில் உள்ள மின் இணைப்பில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் தரைவழியாக சேதம் அடைந்த வயர்கள் மூலம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் காலை மற்றும் இரவு நேரங்களில் விளையாட்டு பயிற்சிக்காக மைதானத்திற்கு வரும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைந்து உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அபாயகரமான முறையில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை எடுத்து செல்ல நடடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.