தஞ்சை பகுதிகளில் செடி, கொடிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள்
தஞ்சை பகுதிகளில் செடி, கொடிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள்
தஞ்சை பகுதிகளில் செடி, கொடிகளை தாங்கியபடி மின்கம்பங்கள் உள்ளதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மின்கம்பங்கள்
தஞ்சை பகுதி மக்களின் மின்வசதிக்காக சாலையோரங்கள், தெருக்கள், முக்கிய வீதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகள் மின் வசதி பெறுவதற்காக வயல் பகுதிகளில் கூட மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதன் பயனாக மக்கள் இரவு அச்சம்மின்றி செல்கின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் சிரமமின்றி படிக்கின்றனர்.
இப்படி மக்களின் வாழ்வில் அடிப்படை அம்சமாக விளங்கும் மின்சாரத்தை வீடுகளுக்கு எடுத்து செல்வது மின்கம்பிகளும், மின்கம்பங்களும் தான். இவற்றை பராமரிக்க தனியாக ஒரு துறையே செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மின்கம்பங்களும், மின்கம்பிகளும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மின்வாரிய ஊழியர்களின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
செடி, கொடிகள்
இந்த நிலையில் தஞ்சை பகுதிகளில் பல மின்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சிறப்பாக உள்ளன. ஆனால் ஒரு சில மின்கம்பங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. குறிப்பாக தஞ்சை சின்ன ஆஸ்பத்திரி பின்புறம், கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மின்கம்பம், நாஞ்சிக்கோட்டை சாலை, உழவர் சந்தை அருகே உள்ள ஒரு சில மின்கம்பங்கள், மின்கம்பிகள் செடி, கொடிகளை தாங்கியபடி காட்சி அளிக்கின்றன.
இதனால் பலத்த காற்று வீசும் போது அந்த பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் செடி, கொடிகளால் மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகிறது. இதனால் மின்கம்பங்கள் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்டபடி உள்ள மின்கம்பங்களை அடையாளம் கண்டு முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.