நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனைக்கு வடகிழக்கு பருவமழையின்போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு ஆய்வு கூட்டம் தியாகராஜநகரில் உள்ள மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 2 ஆஸ்பத்திரிகளுக்கும் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மின்வினியோகம் வழங்கும் முதன்மை மின்பாதையான பாளையங்கோட்டை உப மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் வழங்கும் ஆயுதப்படை மின்பாதை மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கல் ஏற்பட்டால் மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்கும் பாளையங்கோட்டை உப மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கும் மார்க்கெட் மின்பாதை, சமாதானபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் வ.உ.சி. மின்பாதை மற்றும் தியாகராஜநகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் மகாராஜநகர் மின்பாதை என அனைத்து மின் வழித்தடங்கள், மின் சாதனங்களான வலையதரசுற்று, பிரிவுபடுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக களஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இயற்கை இடர்பாடுகளின்போது அனைத்து பொறுப்பு மின் பொறியாளர்களிடம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள மேற்பார்வை மின்பொறியாளர் உத்தரவிட்டார். அத்துடன் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம், இயற்கை இடர்பாடுகளின்போது தவிர்க்க இயலாத நேரத்தில் மின்ஆக்கி ஜெனரேட்டர் நல்ல இயக்க நிலையில் வைப்பதற்கும், தேவையான அளவு டீசல் கையிருப்பு வைப்பதற்கும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நெல்லை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர்கள் சார்லஸ் நல்லத்துரை, சங்கர், சிதம்பரவடிவு, உதவி மின்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர், மின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.