மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த எலக்ட்ரீசியனின்உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டம்


மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த எலக்ட்ரீசியனின்உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டம்
x

பழுதை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த எலக்ட்ரீசியனின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

மின்சாரம் பாய்ந்து சாவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மகன் கோவிந்தசாமி(வயது 31). எலக்ட்ரீசியனான இவருக்கு தனபதி என்ற மனைவியும், ரிஷிதேவன்(7), ரித்திக்தேவன்(5) என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 3-ந்தேதி மாலை காங்குழி கிராமம் காந்திநகரைச் சேர்ந்த கொடியரசு என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் ஏறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் அவரது உடல் பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

போராட்டம்

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூரில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் சொந்த ஊரான அய்யூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், கிராம பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவிந்தசாமியின் இறப்பிற்கு காரணமாக இருந்த கொடியரசு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

பழுதை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த எலக்ட்ரீசியனின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி தேங்குன்றம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கோவிந்தசாமியின் உடலை வாங்கி சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கொடியரசு மகன் சுதாகர் அளித்த புகாரின் பேரில் ஊர் நாட்டார்களான முத்து, சேதுபதி, மகாராஜன், மணிகண்டன், குணசேகரன், திருத்தணிமுருகன், சம்பத் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story