மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி


மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
x

குன்னம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

மின்சாரம் பாய்ந்து பலி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி மெயின் ரோட்டை சோ்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சின்னதுரை (வயது 29), எலக்ட்ரீசியன். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சின்னதுரை நேற்று வரிசைபட்டி கிராமத்தில் ஒருவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றிருந்தார்.

அந்த வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் மாலை நேரத்தில் ஏறிய சின்னதுரை மின் பராமரிப்பு பணி செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக உயா் அழுத்த மின்சார பாதையில் அவரது உடல் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மறியல்

இதுகுறித்து தகவலறிந்த சின்னதுரையின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரியும், அவரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரியும், சின்னதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மருதையான் கோவில்-அகரம் சீகூர் சாலையில் வரிசைபட்டி பிரிவு சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையில், குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்தனர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு ஒழுங்குப்படுத்தப்பட்டு சின்னத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story