கோவில் கோபுரத்திலிருந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் மின்விளக்கு அலங்காரம் செய்த எலக்ட்ரீசியன் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தார். அவரது குடும்பத்தினர் தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலசபாக்கம்
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் மின்விளக்கு அலங்காரம் செய்த எலக்ட்ரீசியன் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தார். அவரது குடும்பத்தினர் தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்விளக்கு அலங்காரம்
கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூரில் பிரசித்தி பெற்ற நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இன்று (புதன்கிழமை) ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வந்தன.
நேற்று பூண்டி கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் கோவிலில் கோபுரத்தின் மீது ஏறி மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் கீழே இறங்கும் போது கால் தவறி கோபுரத்திலிருந்து விழுந்தார்.
படுகாயம் அடைந்த அவர் போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ராஜமாணிக்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினர் உரிய நிவாரண உதவி வழங்குமாறு கோவில் நிர்வாகத்திடம் கேட்டு உள்ளனர். கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மறியல்
இந்த நிலையில் ராஜமாணிக்கம் குடும்பத்தினர் நேற்று மாலை பூண்டி கிராமத்தில் கலசபாக்கம் செல்லும் சாலையில் உறவினர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய நிவாரணத் தொகையும் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.