மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
புதுச்சத்திரம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மின்பாதை ஆய்வாளர்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூரை அடுத்த ராமாயிபட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 53). மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது கல்யாணி பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் இருந்து மின்கசிவு ஏற்படுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வயர்மேன் பாலமுருகன் என்பவருடன் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய விஸ்வநாதன் புறப்பட்டு சென்றார்.
மின்சாரம் தாக்கி சாவு
கல்யாணி குருசாமி கோவிலில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டு இருந்தபோது விஸ்வநாதனை திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஸ்வநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் விஸ்வநாதனின் மனைவி தங்கமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.