மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பு


மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
x

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்ததால் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சாவூர்


மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்ததால் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

மின்சார சட்ட திருத்த மசோதா

மின்விநியோகத்தை தனியாருக்கு விடுவதற்கும், ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகின்ற மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு மின்வாரியத்தில் செயல்படுகின்ற அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாநிலம் முழுவதும் பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது.அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் ஊழியர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் மின்வாரிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் பூட்டப்பட்டு கிடந்தது.

மக்கள் சிரமம்

மின் கட்டணம் செலுத்துவதற்கு நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் மின் கட்டணம் செலுத்துவதற்காக வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் எதற்காக அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கிறது, மின் கட்டணத்தை வேறொரு தேதியில் செலுத்தலாமா? என்ற அறிவிப்பு எதுவும் இல்லாததால் வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதுடன், பூட்டப்பட்டும் இருந்தது. பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தஞ்சை ராஜராஜன் மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை தாங்கினார்.

பல்வேறு சங்க நிர்வாகிகள்

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ. சங்க மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாவட்ட செயலாளர் காணிக்கைராஜ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் ராகவன், பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சுந்தரராஜ், மாவட்ட செயலாளர் சுந்தர்,பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பால.வெங்கடேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், ஜனதா தொழிலாளர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், எம்பிளாயிஸ் பெடரேசன் மாவட்ட செயலாளர் ராஜா, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.


Next Story