மின்சார ரெயில்களில் விரைவில் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே முடிவு


மின்சார ரெயில்களில் விரைவில் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே முடிவு
x

சென்னையில் மின்சார ரெயில்களில் சோதனை அடிப்படையில் ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில், நாள் தோறும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் உள்ளது. பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு புதிய திட்டங்களையும் ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.

மேலும், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதேபோல, சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகள் வசதிக்கு ஏ.சி. ரெயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் தெற்கு ரெயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் மின்சார ரெயில்களில் 2 முதல் 3 ஏ.சி. பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்கிப்பார்க்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் இதற்கான சோதனை ஓட்ட நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரெயிலுக்காக ஏ.சி. பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதனுடன், ஐ.சி.எப். மூலமாகவே சென்னை மின்சார ரெயில்களில் இணைப்பதற்கு தேவையான ஏ.சி. பெட்டிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்படும் பட்சத்தில் அதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story