வாய்க்கால் கரையில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்


வாய்க்கால் கரையில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்
x

வாய்க்கால் கரையில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் அருகே கடந்த 7 மாதங்களாக வாய்க்கால் கரையில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் பகுதி வாய்க்கால் மூலம் வடகண்டம், எட்டியலூர், பாலாவை, மோட்டூர், திருவிழாவட்டம் நாவேலி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

வடகண்டம் வாய்க்காலில் பெரிய மதகு உள்ளது. இந்த மதகு மூலம் பாசன பெறும் பகுதிக்கு தண்ணீர் முறைப்படுத்தி வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையில் வடகண்டம் வாய்க்கால் கரையில் இருந்த மின்கம்பம் மீது ஒரு மரம் விழுந்தது. இதில் மின்கம்பம் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்தும் கீழே விழுந்தது. இதையடுத்து அந்த மரத்தை மின் வாரியத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். ஆனாலும் இதுவரை சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்கவில்லை. மேலும் அறுந்து வாய்க்காலில் விழுந்த மின்கம்பியும் அகற்றப்படவில்லை.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள்

இதற்கு மாறாக அந்த மின்பாதையில் தற்காலிக மின் வினியோகத்தை தடை செய்தது. சாய்ந்த மின்கம்பம் அருகில் உள்ள வடகண்டம் வாய்க்கால் பெரிய மதகு பகுதியில் மின்கம்பிகள் உரசும் நிலையில், அதே வாய்க்காலில் அறுந்த மின்கம்பியும் கிடக்கிறது. இந்த பாதையில் தற்காலிக மின் வினியோகம் தடை செய்யப்பட்டாலும், சாய்ந்து நிற்கும் மின்கம்பம், வாய்க்காலில் கிடக்கும் மின்கம்பி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சீரமைக்க வேண்டும்

இந்த மதகை அடைக்க முடியாத அளவு மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில், குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே கடந்த 7 மாதங்களாக வாய்க்கால் கரையில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும். மேலும் வாய்க்காலில் அறுந்து கிடக்கும் மின் கம்பியை அகற்றி, புதிய மின்கம்பியை பொருத்தி மின் வினியோகம் வழங்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

பழுதடைந்த மதகு(பாக்ஸ்)

வடகண்டம் வாய்க்கால் பெரிய மதகு பழுதடைந்துள்ளது. இதனால் தண்ணீர் பாசனம் முறைப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். ஆனாலும் இந்த பெரிய மதகினை பலகை கொண்டு அடைத்து விவசாயிகள் தண்ணீர் பாசனம் பெற்று வருகின்றனர். எனவே பழுதடைந்த பெரிய மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-


Next Story