தேர்தல் விதிமுறைகள் இன்றுடன் முடிவு
தேர்தல் விதிமுறைகள் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைவதால் ஈரோடு இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
தேர்தல் விதிமுறைகள் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைவதால் ஈரோடு இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் இறந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த மாதம் 27-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் அமக்கப்பட்டு அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இன்றுடன் முடிவு
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்றதை நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதன் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைக்கு வரும் வியாபாரிகளும், கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதில் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை விற்று பணத்தை எடுத்து செல்லும் விவசாயிகளுக்கு சந்தை நிர்வாகம் சார்பில் ரசீது வழங்கப்பட்டதால் ஓரளவுக்கு விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இதனால் ஈரோடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.