மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்: 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை பெறப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இருந்து 6 வேட்பாளர்கள், நகர்ப்புற, பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். எனவே ஊரக பகுதிகளுக்கான தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களான 1-வது வார்டு பாஸ்கர், 2-வது வார்டு மகாதேவி, 3-வது வார்டு கவுன்சிலரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான முத்தமிழ்செல்வி, 4-வது வார்டு டாக்டர் கருணாநிதி, 7-வது வார்டு மதியழகன், 8-வது வார்டு அருள்செல்வி ஆகிய 6 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற பகுதிகளுக்கான தேர்தலில் பெரம்பலூர் நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலரும், நகர்மன்ற துணைத்தலைவருமான ஹரிபாஸ்கர், பூலாம்பாடி பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலரும், பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலட்சுமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகமும், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான லலிதாவும் தேர்தல் முடிவு அறிவித்து சான்றிதழ்களை வழங்கினா்.