ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி தேதி முதல் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது. இதில் விக்னேஸ்வரர் மூசிக வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கற்பகவிருட்சம், காமதேனு, சேனை, நாக வாகனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 31-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு எம்.பி.டி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வாலாஜா பஸ் நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, வாலாஜா தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள், சித்தஞ்சி மோகானந்த சுவாமிகள், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், தக்கார் சிவக்குமார், ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு,
தி.மு.க. நகர செயலாளர் தில்லை, அ.தி.மு.க. நகர செயலாளர் மோகன், ஊர் நாட்டாண்மைதாரர்கள், கோவில் நிர்வாகிகள், வியாபாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள், வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.