கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து துணைத்தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊரப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து துணைத்தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
உள்ளிருப்பு போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்க்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா கார்த்திக் உள்பட 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காமல் அலுவலகத்திற்குள் சென்று ஒரு அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுவாஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் துணைத் தலைவர் உள்ளிட்ட 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலையில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமா நேரில் வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துணை தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை
இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துணைத்தலைவர் மற்றும் 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2 வருடமாக எங்கள் வார்டு பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை, ஊராட்சியில் வரவு, செலவு கணக்குகள் சரியில்லை, தீர்மானங்களில் எங்களிடம் கையொப்பம் பெறவில்லை, தலைவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தால் அதற்கு உரிய பதில் தலைவர் தருவதில்லை இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் நாங்கள் புகார் மனு அளித்தோம் அதற்கு கலெக்டர் இதுவரை எந்தவிதமான பதிலும் கூறாததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஊராட்சியில் அனைத்து வார்டுகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வரவு, செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறது என கூறினார்.