எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு: 3 ஆண்டுகளில் நிறைவடையும்


எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு: 3 ஆண்டுகளில் நிறைவடையும்
x

மறுசீரமைப்புக்கு பிந்தைய எழும்பூர் ரெயில் நிலையத்தின் மாதிரி தோற்றம் 

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

சென்னை,

தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 442 புறநகர் ரெயில்கள் என 562 ரெயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் சராசரியாக 26 ஆயிரத்து 400 பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.அதன்படி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்த பணிகளை மேற்கொள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன.

1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது.பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன.விமான நிலையத்தில் இருப்பது போன்று பயணிகள் வருகை, புறப்பாடு பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நடைமேடை, காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப்பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் பிரத்யேக பாதை அமைக்கப்பட இருக்கிறது.

பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்கு தடையின்றி ரெயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளிவளாகப் பகுதி பிரமாண்டமாக அமைய இருக்கிறது. பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுமானம் அமையும். இந்த பணிகள் அனைத்தும் உலகத்தரத்தில் இருக்கும். மறு சீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

மரங்கள் மற்றும் பயன்பாட்டு பகுதி, கட்டுமானத்துக்கான நிலப்பரப்பு கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம், பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், காத்திருப்பு அரங்கு, அடுக்குமாடி வாகன காப்பகம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 11 இடங்களில் ஆழ்துளை கருவிகள் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மறு சீரமைப்பு பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story