எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை செல்ல 2 நாட்களுக்கு தடை
எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா. சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈ.வே.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பாலம் குறுக்கே (காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து, பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் பணியை மேற்கொள்ள உள்ளனர். எனவே 10-ந்தேதி(இன்று) இரவு 10 மணி முதல் 12-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ஈ.வே.ரா சாலையில் சென்டிரல் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை.
* ஈ.வே.ரா சாலையில் சென்டிரல் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்லலாம்.
* எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா. சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது. அத்தகைய வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பால 'டாப்' சிக்னல் சந்திப்பிலிருந்து (தாளமுத்து நடராஜர் மாளிகை சந்திப்பு) இடதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சாலை, உடுப்பி பாயின்ட், வலதுபுறம் திரும்பி நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை சந்திப்பில் வலது புறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.