எழும்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: பஸ்சை சிறைபிடித்த கல்லூரி மாணவர்கள்
எழும்பூர் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து எம்.எம்.டி.ஏ. காலனிக்கு நேற்று மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. அலுவலக நேரம் என்பதால் அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தாளம் போடுவது, பாட்டு பாடுவது என தங்களுக்கே உரித்தான பாணியில் பயணம் செய்தனர். இது சக பயணிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அவர்களின் இம்சையை தாங்க முடியாத பயணிகள் கண்டக்டரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக கண்டக்டருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கண்டக்டர் ஆபாச வார்த்தைகளால் தங்களை திட்டியதாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே எழும்பூர் பஸ் நிலையம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது கண்டக்டருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி பஸ் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்து இறங்கிய மாணவர்கள் பஸ்சை எடுக்க விடாமல் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் பஸ் நிலையத்திலிருந்த மற்ற பஸ்களை எடுப்பதிலும் இடையூறு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்ற பஸ்சால் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.