கத்தரிக்காய், தக்காளி விலை மீண்டும் உயர்வு
நெல்லையில் கத்தரிக்காய், தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
தக்காளி, கத்தரிக்காய் சமையலில் முக்கிய இடம் பெறும் காய்கறிகள் ஆகும். இவற்றின் விலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.100-க்கு மேல் உயர்ந்திருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளி விலை குறைந்து, மலிவு விலைக்கு கிடைத்தது.
இந்தநிலையில் மீண்டும் விலை உயர்வை நோக்கி செல்கிறது. நெல்லை உழவர் சந்தையில் கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ.25-ஆக உயர்ந்தது. இதையொட்டி சில்லரை கடைகளில் தக்காளி ரூ.30 வரை விற்கப்பட்டது.
இதேபோல் கடந்த சில நாட்களாக கத்தரிக்காய் விலையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் உழவர் சந்தையில் 1 கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.26-க்கு விற்கப்பட்டது.
இந்தநிலையில் கத்தரிக்காய் விலை திடீரென்று ரூ.42 ஆக உயர்ந்தது. சில்லரை கடைகளில் 1 கிலோ கத்தரிக்காய் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
வெங்காயம்
இதேபோல் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.100-க்கும் பல்லாரி விலை ரூ.40 வரையிலும் உயர்ந்துள்ளது. தசரா பண்டிகை, அதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் மழை பருவ காலம் என்பதால் காய்கறி விளைச்சல் பாதிப்பால் வருகை குறைவு ஆகியவற்றால் காய்கறி விலை சற்று உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.