கோழிகளில் முட்டை உற்பத்தி குறைய வாய்ப்பு


கோழிகளில் முட்டை உற்பத்தி குறைய வாய்ப்பு
x

கோழிகளில் வெப்ப அயற்சி காரணமாக முட்டை உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

100 டிகிரி வெயில்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 4 கி.மீ., 6 கி.மீ., 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் பின் பனிக்காலம் முடிவுற்றாலும், சில நாட்களாக பனியின் தாக்கம் காணப்படுகிறது. கோடைக்காலமும் தொடங்கி விட்டதால், பகல் வெப்பம் 100 டிகிரியை தொட்டு விட்டதாலும், பகலில் கோடைக்கான அயற்சியும் காணப்படுகிறது.

வைட்டமின்-சி

இம்மாதிரியான இருவேறு சீதோஷ்ண நிலையில் கோழிகளில் அயற்சி மிகுந்து இருக்கும். இதன் காரணமாக தீவன எடுப்பு குறைந்தும், முட்டை உற்பத்தி மற்றும் அதன் எடை குறைந்தும் காணப்படும். மேலும் வெப்ப அயற்சி நோய்க்கான எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடும். இதை தவிர்க்கும் பொருட்டும், கோழிகள் வெப்பத்தை எதிர்கொண்டு பழக்கப்படுத்தி கொள்ளும் வகையிலும், தீவனத்தில் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் சோடாஉப்பு சேர்த்து வர வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப கோழிகளுக்கு தீவனம் இடாமல், அயற்சியை நீக்கும் வகையில் ஓய்வு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story