காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பு; காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்


காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பு; காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
x

மேகதாது அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவபொம்மையை எரித்து தஞ்சையில், காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு துணையாக இருந்து மேகதாது அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்துவதற்காக காவிரி உரிமை மீட்பு குழுவினர் இன்று தஞ்சை பனகல் கட்டிட அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவபொம்மையை எரிக்க அனுமதி கிடையாது என கூறினர்.

தொடர்ந்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென சிலர் 50 மீட்டர் தொலைவில் போலீஸ் பாதுகாப்பை மீறி காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரின் உருவபொம்மையை எரித்தனர். மேலும் அந்த உருவபொம்மையில் கட்டப்பட்டிருந்த கம்பியை பிடித்து சாலையில் இழுத்து கொண்டே வந்தனர். இதனால் உருவபொம்மையில் தீ பற்றி எரிந்தது.

இதை பார்த்த போலீசார் வேகமாக ஓடி வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் ஓடி வந்து உருவபொம்மையை அணைக்க விடாமல் அங்கும், இங்குமாக உருவபொம்மையை இழுத்து சென்றனர். மேலும் தங்கள் கைகளில் வைத்து இருந்த ஹல்தரின் உருவப்படங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து உருவபொம்மையில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அது முழுவதுமாக எரிந்து விட்டது.

பின்னர் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாக கூறி 2 மினி பஸ்களில் ஏற்றினர். பின்னர் என்ன நினைத்தார்களோ பஸ்சில் ஏற்றியவர்களை கைது செய்யவில்லை என கூறி போலீசார் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டனர். அதன்பிறகு காவிரி உரிமை மீட்பு குழுவினர் மீண்டும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story