"கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" - சென்னை ஐகோர்ட்டு
ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப் பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "மனுதாரர், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளார். அதன்பின்னர், இளங்கலை ஆங்கிலத்தை தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்துள்ளார். எனவே, மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என ஐகோர்ட்டு ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல.
இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-வது இடத்தில் உள்ளது. கல்விக்கு 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.