அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 9 Aug 2023 11:28 AM IST (Updated: 9 Aug 2023 6:10 PM IST)
t-max-icont-min-icon

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் 245 அரசுப்பள்ளி மாணவர்கள். சிறிய உதவி கிடைத்தாலும் தமிழக மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள். நமக்கு கல்வி முன்னோர்களின் போராட்டத்தால் தான் கிடைத்தது. தமிழகத்தில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைத்திட முயற்சிகள் எடுத்து வருகிறோம். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பாதையை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது.

எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று அனைவருக்கும் கிட்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஐஐடியில் படிக்க இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர். ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருப்பது உலகிற்கு தெரியவந்துள்ளது. கடந்தாண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்றது 75 பேர்; இந்தாண்டு 225 மாணவர்கள் செல்கின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும்போது தான் சமூகநீதி முழுமையடைகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும்; அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story