தினத்தந்தி-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி - சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது


தினத்தந்தி-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி - சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது
x

‘தினத்தந்தி' மற்றும் ‘எஸ்.ஆர்.எம்.' இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடக்கிறது.

சென்னை,

பிளஸ்-2 வகுப்பு முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் உயர்கல்வியில் எந்த மாதிரியான படிப்புகளை தேர்வு செய்து படிப்பது? என்பதில் குழப்பம் ஏற்படும். அந்த மாதிரியான குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில் 'தினத்தந்தி' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்து தேர்வு முடிவுக்காக ஆவலோடு காத்திருக்கும் மாணவ-மாணவிகளின் உயர்கல்வி கனவுக்கு ஒரு ஏணிப்படியாக தினத்தந்தி, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் இணைந்து கல்வி கண்காட்சியை நடத்த உள்ளது.

இதில் பிளாட்டினம் ஸ்பான்சராக சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அசோசியேட் ஸ்பான்சராக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம், அமெட் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மீனாட்சி உயர் கல்வி ஆராய்ச்சிக் கழகம், ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவனம், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 3-ந் தேதிகளில் (புதன்கிழமை) இந்த கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. 2 நாட்கள் நடத்தப்பட உள்ள இந்த கல்வி கண்காட்சியை மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

இந்த கண்காட்சியில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன மாதிரியான படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம்? என்பது பற்றிய தெளிவுகள் கிடைக்கும் வகையில் மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், விவசாயம், கேட்டரிங் மற்றும் இதர உயர்கல்வி துறைகள் அடங்கிய 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்று விளக்கங்களை தெரிவிக்க உள்ளனர்.

மேலும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் அரங்குகளுக்கு நேரடியாக சென்று பார்த்து பெற்றோரும், மாணவ-மாணவிகளும் தங்களுக்கான உயர்கல்வி குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.இதுதவிர கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள் என்ன? எவ்வளவு கட்டணம் வரும்? கல்வி உதவித் தொகையை பெறுவது எப்படி? கட்டண சலுகைகள் எவ்வளவு கிடைக்கும்? என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், முதன்மை கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, கல்வி ஆலோசகர் டாக்டர் காயத்ரி சுரேஷ், வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பக்தவச்சலம் ஆகியோரும் கண்காட்சியில் பங்கேற்று, மாணவ-மாணவிகள், பெற்றோருக்கு ஏற்படும் உயர்கல்வி தொடர்பான அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க உள்ளனர்.

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், அவர்களிடம் இருக்கும் கல்வி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை நேரில் சென்று பார்ப்பதற்கு பதிலாக ஒரே கூரையின் கீழ் பலவிதமான உயர்கல்வி நிறுவனங்களின் சேவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு இந்த கல்வி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.


Next Story