அரிவாள் வெட்டில் காயமடைந்த அண்ணன்-தங்கையிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை
அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அண்ணன்-தங்கையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரசு சார்பில் ரூ.1.92 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார். தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.
இதற்கிடையே அரசு உத்தரவின் பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பெனட் ஆசீர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதியில் முதல் கட்டமாக ரூ.1,92,500-ஐ பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் அம்பிகாபதியிடம் வழங்கினார். மேலும் அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாகவும், அடுத்தகட்ட நிதியையும் உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.