தட்டச்சு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது
திருவண்ணாமலையில் தட்டச்சு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.
தண்டராம்பட்டு
தமிழகம் முழுவதும் சுமார் 3500 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் இயங்கி வருகின்றன.
உயர் கல்வித் துறையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு இறுதி வாரங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வுகள் நடந்தது.
சுமார் 2½ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்த தட்டச்சு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தமிழகம் முழுவதும் 46 மையங்களில் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை திருவண்ணாமலையில் உள்ள குமரன் பாலிடெக்னிக், விக்னேஷ் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் 4 நாட்கள் நடைபெறும் என்று மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணி முடிந்தவுடன் உடனடியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.
இதனால் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த 15 நாட்களுக்குள் தட்டச்சு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.