ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி பலம் பொருந்திய தலைவர் கிடையாது; ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பேட்டி
ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி பலம் பொருந்திய தலைவர் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள், அதனை ஏற்றுக்கொள்கிறோம். இந்த தீர்ப்பால் கட்சியை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதி தோற்று போயுள்ளது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என்று தொண்டர்கள், பொறுப்பாளர்கள் கொடுத்த கவுரவம் இந்த தீர்ப்பினால் பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க. 2 அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. என்றுமே அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தான் நாங்கள். அ.தி.மு.க.வில் யார் தலைமையை ஏற்பது என்று தான் எங்களின் போராட்டமே தவிர, கட்சியை விட்டு விலகக்கூடிய எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்களுடையது. வேறு எந்த கட்சிக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி மிகவும் பலம் பொருந்திய தலைவர் கிடையாது. 2 அணிகளை இணைப்பதற்கு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எனக்கு கட்சி பதவி ஆசை கிடையாது. கட்சி ஒன்றிணைய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை போல்தான் தேர்தல் ஆணையமும் தீர்ப்பும் சொல்லும் என்று நான் எண்ணுகிறேன், என்றார்.