இரட்டை இலை சின்னம் பெற எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் -ஜெயக்குமார் பேட்டி


இரட்டை இலை சின்னம் பெற எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் -ஜெயக்குமார் பேட்டி
x

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் பெற எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அக்கட்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார்.

இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாங்கள் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சையாக களம் இறங்குவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. 'இரட்டை இலை' சின்னம் சிக்கலில் இருக்கும் போது எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டி அறிவிப்பு இடைத்தேர்தல் களத்தை விறுவிறுப்படைய செய்துள்ளது.

தேவநாதன் யாதவுடன் சந்திப்பு

இரு தரப்பில் இருந்து கூட்டணி கட்சி தலைவர்களை போட்டிபோட்டு சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் குழு நேற்று முன்தினம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

இந்தநிலையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவை, நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின் ஆகியோர் நேற்று சந்தித்து இடைத்தேர்தலுக்காக ஆதரவு கேட்டனர்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறான தகவல்

அண்ணாமலையை சந்திக்க சென்றபோது, மொத்தமாக செல்வோம் என்ற எண்ணத்தில் மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்காக கமலாலயம் வாசலில் சிறிது நேரம் காத்திருந்தோம். உடனே நாங்கள் யாருக்காகவோ? காத்திருப்பது போல பரப்பி விட்டார்கள். அது தவறு.

இந்தியா என்பது ஒரு சுதந்திர நாடு. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு போவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எனவே ஓ.பன்னீர்செல்வம் குஜராத் மட்டுமல்ல பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் என எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அவர் செல்வதை பற்றி சொல்ல ஒன்றும் கிடையாது.

தி.மு.க.வின் 'பி' டீம்

2 நீதிபதிகள் கொண்ட சென்னை ஐகோர்ட்டின் அமர்வு கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில், அ.தி.மு.க. என்பது கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சீரும், சிறப்புமாக சென்றுகொண்டிருக்கிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் எப்படி அ.தி.மு.க. என்று தங்களை சொல்லிக்கொள்ள முடியும்?

எனவே அவர் அப்படி சொல்வது சட்டரீதியாக தவறு. அந்த அடிப்படையில் தி.மு.க.வின் 'பி' டீமாக, அ.தி.மு.க.வை சிறுமைப்படுத்த, தொந்தரவு கொடுக்கும் செயல்பாடுகளில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அவரை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர் தரப்பினரை ஒரு சுயேச்சை வேட்பாளர் போலத்தான் மக்கள் கருதுவார்கள். அவர் ஏற்கனவே தன் நிலையில் இருந்து மிகவும் கீழே சென்றுவிட்டார். இந்த இடைத்தேர்தலுடன் அவரது கதை முடியும். நோட்டாவுக்கு கீழே அவர் தரப்பு சென்றுவிடும்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்து போடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உண்டு. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது.

தி.மு.க. அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேவேளை அ.தி.மு.க. எழுச்சியுடன் காணப்படுகிறது. எனவே இந்த அரசின் மோசமான செயல்பாடுகளை சொல்லியும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லியும் மக்கள் மத்தியில் மகத்தான வெற்றியை பெறுவோம். இந்த இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story