"கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

கவர்னர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 1,066 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.

அதன்பிறகு கம்பம் பாவலர் படிப்பகம் அருகே மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், வீரபாண்டியில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

'நீட்' தேர்வு

'நீட்' விலக்கு நம்முடைய இலக்கு என்று மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம்.

'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் இந்த ஒரு உதயநிதி களத்துக்கு வந்தால் பத்தாது. நீங்கள் அத்தனை பேரும் உதயநிதியாக மாறி களத்திற்கு வர வேண்டும்.

அ.தி.மு.க.வுக்கு அழைப்பு

அ.தி.மு.க.வுக்கு நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். தயவுசெய்து இதை அரசியல் ஆக்காதீர்கள். 'நீட்' தேர்வு விலக்கு வந்து விட்டால் அந்த ஒட்டுமொத்த பெருமையையும் நான் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்.

அ.தி.மு.க. தான் காரணம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்பவும் இந்த 'நீட்' தேர்வு ஒழிப்பு என்பது நாடகம் என்கிறார்கள். இன்னொரு உயிர் போய்விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

பா.ஜ.க. ஊழல்

மோடியை ஒரேயொரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவை மாற்றிக்காட்டுவேன் என்றார். இன்றைக்கு இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுகிறார். இது மட்டும் தான் மோடி செய்த ஒரே உருப்படியான வேலை.

சி.ஏ.ஜி. என்ற மத்திய அரசின் தணிக்கை குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் ஊழலை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை. துவாரகா சாலை என்று ஒரு திட்டம். அதில் 1 கி.மீ. ரோடு போடுவதற்கு ரூ.250 கோடி செலவு என்று கணக்கு காட்டி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு பயம்

தமிழக கவர்னர் ஒரு நிகழ்ச்சியில் சென்று, தமிழ்நாட்டில் ஆரியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது என்று பேசி இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்கிறார்கள். அதற்கு அவர், இதுகுறித்து பதில் சொல்ல முடியாது. அதற்கு நிறைய படித்து இருக்கணும். இதில் எல்லாம் தலையிட மாட்டேன் என்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அவர் தான் தலைவர். கட்சி பெயரில் அண்ணா இருக்கிறது, திராவிடம் இருக்கிறது. ஆனால், இதில் எல்லாம் தலையிட மாட்டேன் என்கிறார். அவ்வளவு பயம் அவருக்கு.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டது என்று புதிதாக நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை நீங்கள் ஒன்றாக வந்தாலும் வெற்றி பெறப்போவது நாங்கள்தான். தனியாக வந்தாலும் ஓட விடப்போவது தி.மு.க. தான்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மணிமண்டபத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அப்போது அங்குள்ள பென்னிகுயிக் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story