பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மூன்று முறை தேசிய விருதை பெற்றவர், பத்ம பூஷன் வாணி ஜெயராம் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பழம்பெரும் பாடகியும், சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டவருமான வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.