'மாண்டஸ் புயல்' எதிரொலி; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக வடதமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.