காய்ச்சல் பரவல் எதிரொலி: கடலூரில் பள்ளிகளில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்...!
வைரஸ் காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனால் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில் சிறுவர்களே அதிகளவில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், காய்ச்சல் பரவல் எதிரொலியாக கடலூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டு புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் காய்ச்சல் அதிகம் உள்ள கிராமங்களிலும் புகை மருந்து அடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மாணவர்கள் இடையே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.