பஞ்சு, நூல் விலை அதிகரிப்பு எதிரொலி; ஈரோட்டில் விற்பனைக்கு வந்த 5 ஆயிரம் விசைத்தறிகள்
விசைத்தறிகள் இயங்கி வந்த பல குடோன்கள் காலியாகி வாடகைக்கு விடுவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு,
ஈரோட்டில் மஞ்சள் மற்றும் ஜவுளி ஆகியவை பிரதான தொழில்களாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஜவுளித் தொழிலை நம்பி அங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் உள்ளன.
இந்த நிலையில் வரலாறு காணாத பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால், ஜவுளி மற்றும் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் பெரும் இழப்பை தாக்குப்பிடிக்க முடியாமல், தங்கள் பாரம்பரிய தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஈரோட்டில் மட்டும் கடந்த 7 மாதங்களில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அடிமட்ட விலைக்கு பழைய இரும்பு கடைகளில் விற்கப்பட்டுள்ளன. இதனால் விசைத்தறிகள் இயங்கி வந்த பல குடோன்கள் காலியாகி வாடகைக்கு விடுவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன.
பல தலைமுறைகளாக நெசவு தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பஞ்சு பதுக்கல் மற்றும் ஏற்றுமதியை தடுத்து செயற்கையான விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.