'அக்னிபத்' எதிரொலி: சென்னையில் போர் நினைவு சின்னம் சாலை மூடல் - போலீசார் உஷார்
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான இளைஞர்கள் போராட்டத்தை தடுப்பதற்காக போலீசார் உஷார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை,
இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. ராணுவ பணியில் சேர்வதை கனவாக எண்ணிய இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தமிழகத்திலும் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் பரவி உள்ளது. அந்த வைகையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நேற்று தலைமை செயலக வளாகம் செல்லும் வழியில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் தொடர வாய்ப்பு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே சென்னை பல்லவன் இல்லம் அருகே அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு, போர் நினைவுச்சின்னம் ஆகிய இடங்கள் செல்லும் வழியை போலீசார் இன்று முடக்கி வைத்து, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர்.