ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடைபெற்றது.
ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
புனித வெள்ளி
நேற்றுமுன்தினம் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை மற்றும் ஏசுவின் உருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஈஸ்டர் பண்டிகை
சிலுவையில் உயிர்விட்ட இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் கலந்துகொள்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிமாவட்டம் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.