ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தை கைவிட வலியுறுத்தி நடந்தது
உள்ளாட்சித் துறையில் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமனத்தை கைவிட வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
உள்ளாட்சித் துறையில் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமனத்தை கைவிட வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளில் ஒப்பந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து உள்ளாட்சிகளிலும் ஆள் குறைப்பு செய்து பணிபுரியும் ஊழியர்களின் வேலைப்பளு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியிலும் இதே நிலை நிலவுவதால் இதை கண்டித்து சி.ஐ.டி.யு. நகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகராட்சி ஊழியர்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
12 மணி நேரம்
ஊட்டி நகராட்சியில் 700 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது சுமார் 300 பேர் மட்டும் தான் பணிபுரிகிறார்கள், அதிலும் சுமார் 150 பேருக்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். ஒப்பந்த ஊழியர்களின் பணி நேரம் என்பது 8 மணி நேரத்திற்கு பதிலாக, 12 மணி நேரம் என்று அதிகரிக்கப்பட்டு உள்ளது.எனவே உள்ளாட்சித் துறையில் ஒப்பந்த பணியாளர்கள் நியமன முறையை கைவிட வேண்டும். அரசாணை எண் 152 மற்றும் 159 ரத்து செய்ய வேண்டும்.சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும். 50 வயதிற்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. பொருளாளர் நவீன் சந்திரன், செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.